மனைவி தராசுபடியால் தாக்கி படுகாயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் தராசு படி தாக்குதலினால் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மனைவியின் தராசு படி தாக்குதலினால் திருகோணமலை -பன்குளம் பகுதியைச்சேர்ந்த ஏ.செல்வேந்திரன் (55வயது) காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

வயல் வேலைக்குச் சென்று வீட்டுக்கு வரும்போது அதிகளவிலான மதுபோதையில் வந்ததாகவும், இதனையடுத்து  தன்னை தாக்கியதாகவும், இதேவேளை கோபம் கொண்ட நிலையில் கடையிலிருந்த தராசு படியால் எறிந்த போது தலையில் பட்ட போது மயங்கி விழுந்ததாகவும், இது நேரத்தில் 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்ததாகவும், மனைவி வைத்தியசாலை தரப்பினருக்கு தெரிவித்துள்ளார்.

தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் குறித்து நபர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.