திருடிய 50 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் சந்தேக நபர் கைது

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை -தோப்பூர் பகுதியில் திருடிய நகைகளை விற்பனை செய்வதற்காக முற்சக்கர வண்டியில் வருகை தந்த சந்தேக நபரொருவரை சூரியபுர வீதி சோதனை சாவடியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

சேநுவர பிரதேசத்தில் இருந்து முச்சக்கர வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கந்தளாய் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் சூரியபுர சோதனை சாவடியில் குறித்த முச்சக்கர வண்டியை சோதனை இட்டபோது கையில் பை ஒன்றினை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகம் கொண்ட பொலிஸார் குறித்த பையை சோதனையிட்டபோது குறித்த பையில் இருந்து தங்க ஆபரணங்கள் சில கண்டெடுக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் தொடர்பில் மூதூர் பொலிஸ் நிலையத்தில் திருட்டு சம்பவத்துடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த சந்தேக நபரை மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும்,  50 இலட்சத்துக்கும் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தோப்பூர்- 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த அப்துல் வஹாப் முஹம்மட் அலி (25வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.