முதலீட்டாளர்களிடமிருந்து எங்களுக்கு கமிஷன் தேவையில்லை – சஜித் பிரேமதாச
முதலீட்டாளர்களிடமிருந்து கமிஷன் தேவையில்லை
உலகின் முன்னணி தனவந்தர்கள் முதலீட்டாளர்களுக்கு நம் நாட்டின் கதவுகளைத் திறந்து, அவர்கள் இந்நாட்டில் முதலீடு செய்யக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் எனவும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில், எத்தனை முதலீட்டாளர்கள் வந்தாலும் இராஜபக்சர்களைப் போல் 10,20,30 சதவீதம் என கமிஷன் கோருவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்கும் முதலீட்டாளர்கள் மட்டுமே நாட்டிற்குத் தேவைப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று வியாழக்கிழமை மொனராகலை பிபிலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
ஒரு நாடாக நாம் பல விசால மரணப் பொறிகளில் சிக்கித் தவிக்கிறோம் எனவும், இந்த மரணப் பொறியில் இருந்து மீள வேண்டுமானால், ஒரு வட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணங்களை விட்டுவிட்டு வட்டத்திற்கு வெளியே பரந்த அடிப்படையில் சிந்திக்க வேண்டும் எனவும், அன்னிய நேரடி முதலீடாக பில்லியன் கணக்கான டொலர்களை நம் நாட்டிற்கு எப்படி கொண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும் எனவும், நாட்டில் 2 பயங்கரவாத யுத்தங்கள் இடம்பெற்ற போதும் ரணசிங்க பிரேமதாச வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைத்து 200 ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி என்ற வகையில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து அரச அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான ஆதரவை கோரினாலும், ஏனைய மாற்று அரசியல் கட்சிகளைப் போல் வெறுமனே வாக்குக் கேட்டு பிச்சை எடுக்கவில்லை எனவும், 75 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில் முதன்முறையாக மக்களுக்காக செயற்பட்டு மக்களுக்காக சேவையாற்றி அரச அதிகாரத்தை கோருவது ஐக்கிய மக்கள் சக்தியே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தொழிலொன்றை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளில் நமது நாடு அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டதாகவும்இதற்போது வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளுடன் கூட நமது நாடு போட்டியிட வேண்டியுள்ளதாகவும், நமது நாட்டில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் உள்ளது என்ற மனப்பான்மையை உருவாக்க வேண்டும் எனவும், இதற்காக நாட்டின் தலைவர் முதல் அனைவரினதும் அணுகுமுறையில் மனோபாவ ரீதியாக கூட மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்