12 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் தொலைபேசியை திருடியவர் கைது

-யாழ் நிருபர்-

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்திகை பகுதியில் களவாடப்பட்ட நகை மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டதுடன் 32 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2022ம் ஆண்டு 5ஆம் மாதம் இந்த களவுச் சம்பவம் இடம்பெற்றது. இதன்போது 12 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் கையடக்க தொலைபேசி ஒன்றும் களவாடப்பட்டது.

இது குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாடானது காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் நேற்று செவ்வாய்க்கிழமை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர் திருடிய நகைகளை வவுனியாவில் உள்ள இரண்டு நகைக்கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. அத்துடன் தொலைபேசியும் வவுனியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் தொலைபேசி மூலமாக களவு வெளிப்பட்டது.

இந்நிலையில் கடையில் விற்கப்பட்டு உருக்கிய நிலையில் காணப்பட்ட நகை இன்று புதன்கிழமை மீட்கப்பட்டது.

சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்ட நிலையில், அவரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்