ஜனாதிபதியை சந்திக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்று சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.
ஜனாதிபதியால் தமது கோரிக்கைக்கு அமைய இந்த பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது, தங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என நம்பிக்கை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சந்திப்பபொன்றும் இன்று (25) சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதற்கான நோக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகும்.
எதிர்வரும் திங்கட்கிழமை அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கை, மேலதிக கொடுப்பனவை குறைத்தல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள், சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
இலங்கை மின்சார சபை பொறியிலாளர் மற்றும் சட்டத்துறை சங்கத்தின் இணைப்பாளர் நந்தன உதய குமார இதன்போது 12 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு நாடுமுழுவதும் உள்ள தமது தொழிற்சங்க பிரதிநிதிகள், கொழும்புக்கு வந்து இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.