மீனவர் வலையில் சிக்கிய மர்மப்பொருள்
இந்தியாவில் – விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்(38). இன்று காலை வழக்கம்போல் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்துக் கொண்டு கரை திரும்பும் வேளையில் அவரது வலையில் ஒரு மர்ம பொருள் இருந்துள்ளது.
இதனைப் பார்த்து அவர் இது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருக்கும் என்று கருதி வனத்துறை, பொலிஸார், கடலோர பொலிஸ் படை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீனவர் வலையில் சிக்கிய சுமார் 10 கிலோ எடையுள்ள மர்ம பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதன்போது அதிகாரிகள் அது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருக்கக்கூடும். ஆனாலும் இதனை முறையாக ஆய்வகத்தில் சோதனை செய்தால் மட்டுமே இதன் உண்மை தெரியவரும் என தெரிவித்தனர்.
மேலும் இது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருந்தால் இதன் மதிப்பு சர்வதேச அளவில் பல கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் அதிகாரிகள் அங்கு இருந்து அந்த திமிங்கல கழிவை ஆய்வுக்காக பத்திரமாக எடுத்து சென்றனர்.