வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாதணியால் தாக்கிய சந்தேகநபர் கைது
பண்டாரவளை பொலிஸார் ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரொருவரை கைதுசெய்துள்ளனர்.
நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பண்டாரவளை பகுதியில், தண்டவாளத்துக்கு அப்பால் நின்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர் ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை தமது பாதணியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பப்பட்டது.
பொலிஸாரால் குறித்த காணொளியை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கமைய, பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை காலை நேரத்தில், சென்ற ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை, குறித்த சந்தேகநபர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.