மாரடைப்பை எவ்வாறு உணர்த்தும் அறிகுறிகள்

கார்டியோவாஸ்குலர் நோய்கள் எனப்படும் (CVDs) உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாகும். ஆண்டுதோறும் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இதற்குப் பலியாகி வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதில் ஐந்தில் நான்கு இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக நிகழ்கின்றன.

சைலன்ட் கில்லர் எனப்படும் மாரடைப்பு, முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்த இந்த நோய் தற்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுகிறது. இதய தசையின் குறிப்பிட்ட பகுதிக்கு போதுமான ரத்தம் கிடைக்காத போது மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு திடீரென ஏற்பட்டு ஒருவரைத் தீவிரமான நிலைக்குத் தள்ளுகிறது என்று நம்மில் பெரும்பாலானோர் நம்புகிறோம். ஆனால் உண்மையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்போஇ சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்போ சில எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும்.

அதன் சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிக்பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றும்.

மாரடைப்பு நிகழ்வதற்கு முன் ஏற்பட்ட அறிகுறிகள் தொடர்பான ஆய்வு ஒன்று பாதிக்கப்பட்ட சுமார் 50 பெண்களிடையே நடத்தப்பட்டது.

 

பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு ஆண்களுக்கு ஏற்படுவதை விட சில வேறுபட்ட அறிகுறிகளை கொண்டிருக்க கூடும். மாரடைப்பிலிருந்து  பிழைத்த பெண்களைக் கொண்டு ஹார்வர்ட் ஹெல்த் சர்வே ஒன்றை மேற்கொண்டது. ஆய்வை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை மாரடைப்பு திடீரென்று நிகழும் என்ற கருத்தை பொய்யாக்குகிறது.

இதன்படி மாரடைப்பு ஏற்படும் என்பது உணர்த்திய 2 பொதுவான அறிகுறிகளாக இதுவரை அனுபவிக்காத அளவு சோர்வு மற்றும் தூக்கமின்மை இருந்திருக்கிறது. இவை தவிர மூச்சுத் திணறல், பலவீனம், அதிக வியர்வை, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவை ஹார்ட் அட்டாக்கின்போது ஏற்படும் சில முக்கிய அறிகுறிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் துவங்கிய உடனே நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது மற்றும் உரியப் பரிசோதனைகளை மேற்கொள்வது மாரடைப்பு இருந்து தப்பிக்கப் பெண்களுக்கு உதவும்.

மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்: ஒருவருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தவுடன் உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு செய்து விட்டு, அது வரும் வரையிலான நேரத்திற்குள் ஆஸ்பிரின் மாத்திரையைப் பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கலாம். ஆஸ்பிரின் எதற்கு என்றால் இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு மாரடைப்பின் தீவிரத்தைப் பொறுத்து இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பின் அளவை பொறுத்து அதனைக் கரைக்க மருந்துகளை பயன்படுத்துவதா அல்லது அறுவை சிகிச்சை செய்யவதா என நிபுணர்கள் முடிவெடுப்பார்கள்.

 

(தகவல்கள் : news 18 தமிழ்)