இணையத்தளத்தை தவறாக பயன்படுத்திய மாணவி கைது

இந்தியாவில் – டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச இணையதளங்களில் வெளிவந்துள்ளதாகவும்,  தனது சகோதரனுடன் இருக்கும் படங்களை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும், புதிய எண்களில் இருந்து தவறான செய்திகள் வருவதாவும் பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்திவந்தனர்.படங்கள் வெளியிடப்பட்ட ஐபி எண்களை வைத்து குற்றவாளியைத் தேடி வந்த நிலையில், 19 வயது கல்லூரி மாணவிதான் இந்த செயலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 

ஒரு மாணவி ஏன் மற்றொரு பெண்ணின் படங்களை தவறாக சித்தரித்து இணையத்தில் வெளியிட வேண்டும் என்று விசாரித்த போதுதான் மற்றொரு உண்மை வெளிப்பட்டுள்ளது.

பொலிஸாரிடம் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரர் இதற்கு முன்னர் கல்லூரி மாணவியின் படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டது தெரியவந்துள்ளது.

அந்த இளைஞரைப் பழி வாங்குவதற்காக அவரது சகோதரியின் படங்களை சமூக வலை தளங்களில் இருந்து எடுத்து அதை தவறாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டதாக கல்லூரி மாணவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதோடு படங்களை பதிவிடுவதற்காக தனது அம்மாவின் தொலைபேசி இலக்கங்களை வைத்து போலி சமூக ஊடக கணக்கை உருவாக்கி நிர்வகித்து வந்துள்ளார்.

அவர் தனது தவறுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து மாணவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.