
சட்டவிரோத வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களத்தின் எச்சரிக்கை
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் சில வெட்டப்பட்ட பகுதிகள் நேற்று திங்கட்கிழமை அழிக்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
அரச சொத்துக்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை தமது சுங்க வருமான கண்காணிப்புப் பிரிவினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றியுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத வாகனங்களை சேமித்து வைக்க இலங்கை சுங்க திணைக்களத்தில் சேமிப்பிடம் இல்லாததால் பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வாகன உதிரிபாகங்களை உலோக இறக்குமதியாளர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ மாற்ற முடியாது என்றும், இந்த உதிரிப்பாகங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் பகுதிகளை புதிய வாகனங்களில் இணைக்க பயன்படுத்த முடியாது என்றும் குறித்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
பயன்படுத்தக்கூடிய அனைத்து பாகங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அகற்றப்பட்டதன் பின்னர் எஞ்சிய வாகனம் பகுதிகள் அழிக்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கக் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய காரணிகளின் அடிப்படையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் வாகன பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன.
1. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் இருந்து வாகன உதிரிபாகங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்கவும்
2. அத்தகைய வாகனங்களை நிராகரிப்பதன் மூலம் இலங்கை சுங்கத்திற்காக கூடுதல் சேமிப்பு இடம் உருவாக்கப்பட்டுள்ளது
3. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் இவ்வாறான வாகனங்கள் இலங்கை சுங்கத்தால் ஒருபோதும் விடுவிக்கப்படாது என பொதுமக்களுக்கு ஒரு செய்தி
