பொழுதுபோக்கிற்காக படம் செய்கிறான் தனுஷ் : வாத்தி குறித்து மனம் திறந்த பாரதிராஜா

 

சென்னை: தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் வாத்தி படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் வாத்தி. சம்யுக்தா, பாரதிராஜா (சிறப்புத் தோற்றம்), சமுத்திரகனி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கல்வி வியாபாரமாவதை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படமானது கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தச் சூழலில் வாத்தி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா படம் குறித்தும், தனுஷ் குறித்தும் நெகிழ்ச்சியாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், ” என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல்கற்களை தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்து நின்றிருக்கிறேன். அப்படி என் பயணத்தில் ஸ்தம்பித்து நின்ற இடம்தான் வாத்தி. இந்தப் படம் சமூகத்திற்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை கூறுகிறது.

தனுஷ் என் பிள்ளை மாதிரி. அவன் பொழுதுபோக்கிற்காக படம் எடுத்தாலும் சமுதாய நோக்கத்திற்காக எடுக்கிறார். இப்படிப்பட்ட பிள்ளை கிடைப்பதற்கு திரையுலகம் தவம் செய்திருக்க வேண்டும். அவன் நடிகன் மட்டுமில்லை; எழுத்தாளன், பாடகன், சிந்தனை மனிதன் என பல முகங்களை கொண்டவன் தனுஷ்.

எத்தனையோ முத்துக்கள் திரையுலகில் இருக்கின்றன. அந்த முத்துக்களில் ஒரு சிறந்த முத்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி. சம்யுக்தாவிடம் ஒரு டீச்சருக்கான அம்சம் இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த வருடத்தில் இசையமைப்பிற்கும் சரி நடிப்புக்கும் சரி ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.