
திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழு
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதிய நிதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லாத காரணத்தினால் வாக்குறுதியளித்தபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது சிரமமாக உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி தேர்தலை நடத்த முடியாதென தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.
அதேவேளை வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு போதியளவு பணம் கிடைக்கப்பெறாத நிலையில் அச்சிடல் பணிகள் அரசாங்க அச்சத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதனால், அரசாங்க அச்சகம் உரிய வகையில் வாக்குசீட்டுகளை வழங்காமையினால் எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை காலவரையறையின்றி பிற்போட தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.
எவ்வாறாயினும், வாக்குறுதியளிக்கப்பட்ட திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
