உலக வங்கி நிதியுதவி PSSP திட்ட பணிப்பாளர் உட்பட குழுவினர் திருகோணமலைக்கு திடீர் விஜயம்
-திருகோணமலை நிருபர்-
உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்ப சுகாதார பிரிவினை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக PSSP திட்டக்குழுவினர் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
PSSP என்றழைக்கப்படும் ஆரம்ப சுகாதாரப் பிரிவினை வலுவூட்டும் திட்ட குழுவினர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார பிரிவினை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் 19 வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிறுநீரகப் பரிசோதனை, குருதி அமுக்கம், இருதய நோய் மற்றும் ஏனைய இரத்த பரிசோதனைகளை பரிசோதித்து தொற்றா நோய்களை கண்டறிந்து எதிர்காலத்தில் நோயற்ற சமூகமாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தினை நேரடியாக பார்வையிடுவதற்காக அத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பண்டார மற்றும் அவரது குழுவினர் இன்று கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று 35 வயதுக்கு மேற்பட்டவர்களின் இரத்த மாதிரிகளை பெற்று குறித்த மாதிரிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் கரிசனை காட்டி நோயாளர்களை நோய் தாக்கங்களிலிருந்து குறைப்பதற்காகவே இத்திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அக்குழுவினர் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மக்களுக்கு இத்திட்டத்தின் ஊடாக தொடர்ச்சியான சேவைகளை வழங்க வேண்டும் எனவும், திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
இக்கள விஜயத்தின் போது கிழக்கு மாகாண திட்டமிடல் மருத்துவ அதிகாரி டொக்டர் வீ. குகன், டொக்டர் கோகுலன் என பலரும் கலந்து கொண்டனர்.