ஒரேஞ் ஜூஸ் கேட்டவர்களுக்கு சலவை தூள் கரைசலை வழங்கிய அவலம்

சீனாவின் ஷேஜியாங் மாகாணத்தில் உணவகம் ஒன்றில் ஒரேஞ் ஜூஸ் பறிமாறப்பட்டது.அனைவரும் அதை குடிக்கத் தொடங்கியதும் ஜுஸின் சுவை ஏதோ கசக்கும் சுவையில் இருப்பதாக உணர்ந்துள்ளனர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தான் இவர்கள் சாப்பிட்டது ஜூஸ் அல்ல, தரையை சுத்தம் செய்யும் சலவை தூள் கரைசல் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பின்னர் உணவகத்தில் விசாரித்த போது ஜூஸ் கொடுத்த பணிப்பெண் அந்த உணவகத்தின் ஊழியர் அல்ல. ஒரு நாள் உதவிக்காக வெயிட்டராக இருந்துள்ளார். அவருக்கு பார்வையில் சற்று குறைபாடு இருந்த நிலையில் ஜூஸ்சுக்கு பதிலாக சலவை தூள் கரைசலை கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்போது ஏழு பேரின் உடல் நிலையும் சீராகியுள்ள நிலையில், பொலிஸாரிடம் புகார் அளித்து இழப்பீடு பெறவுள்ளோம் என பாதிக்கப்பட்ட நபர்களின் ஒருவரான வுகோங்க் தெரிவித்துள்ளார். முதலில் வுகோங்க் இந்த சம்பவத்தை விவரித்து வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

இதன் மூலம் தான் இந்த அதிர்ச்சி வெளிவந்தது. ஆனால், பின்னர் அந்த வீடியோவை வூகோங்க் டிலிட் செய்து விட்டார். சீனாவில் புதிதாக வந்துள்ள சலவை தூள் கரைசல்  பிராண்ட் ஒன்றின் போத்தலை பார்த்தால் அச்சு அசலாக ஆரஞ்சு ஜூஸ் போல தெரிகிறது. அந்த போத்தல்களில் உள்ள ஸ்டிக்கர்களில் சீன மொழிக்கு பதிலாக ஆங்கிலம் அல்லது ஜப்பானிய மொழி இடம்பெற்றிருப்பதால் அதை பல சீன மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன. எனவே, இதன் மூலமாகக் கூட குழப்பம் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.