தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திர திருட்டு சம்பவம் : இரட்டை சகோதரர்கள் கைது
கம்பளை நகரில் தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திர திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் 04 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் இருவர் இரட்டை சகோதரர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் 6 பேரை 48 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களில் ஒருவரை பிணையில் விடுவிக்க கம்பளை நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம் கலஹா – ஹல்வத்த பிரதேசத்தில் 200 அடி உயரமான குன்றின் மீது வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிடப்பட்ட 1,870,000 ரூபா பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன், மோட்டார் சைக்கிள், இரண்டு தங்க நெக்லஸ்கள், இரண்டு சலவை இயந்திரங்கள், கையடக்கத் தொலைபேசி மற்றும் தங்க மோதிரம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் 2020 டிசம்பர் 06 ஆம் திகதி கலஹா பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் கொள்ளையடித்து அங்குள்ள பெட்டகத்தை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், அது தோல்வியடைந்ததால், நிதி நிறுவனத்தில் இருந்த வேறு சில உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன.
மேலும், இந்த குழு இரண்டு நகை கடைகளிலும் கொள்ளையடித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.