
வீட்டு வாசலில் வந்து தாக்கிய காட்டு யானை : ஒருவர் உயிரிழப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – நீணாக்கேணி பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி முதியவரொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் தோப்பூர் – நீணாக்கேணி பகுதியைச் சேர்ந்த குப்பைத்தம்பி அப்துல் காதர் (வயது 80) என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்றபோது உயிரிழந்த நபரும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது வெளியில் ஏதோ சத்தமொன்று கேட்டுள்ளது.
இதன்போது குறித்த நபர் வீட்டு வாசலில் வந்து பார்த்தபோது வாசலில் நின்ற யானை அவரை தாக்கியுள்ளதோடு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை வீட்டுக் கதவையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த நபரின் வீட்டிலிருந்த தென்னை மரங்களையும் காட்டு யானை சேதப்படுத்தியுள்ளன.
குறித்த இடத்திற்கு திடிர் மரண விசாரணை அதிகாரி மற்றும் சேருநுவர பொலிஸார் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதோடு மேலதிக விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
