
குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்
கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நேரத்தையும் திகதியையும் முன்பதிவு செய்துள்ளவர்கள் சம்பந்தப்பட்ட திகதிக்கு மறுநாள் வந்து வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தின் கணனி அமைப்பில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பிழை காரணமாக நேற்று வழங்கப்படவிருந்த கடவுச்சீட்டுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளவிருந்த அனைவரையும் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு பின்னர் பத்தரமுல்லையில் உள்ள அலுவலகத்திற்கு வந்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேநேரம் இன்று நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களுக்கு நாளை கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளவர்களுக்காக எதிர்வரும் சனிக்கிழமை கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும்.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு விநியோக சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை வர முடியாதவர்களின் கடவுச்சீட்டுகள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
