நீதவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரின் காரை திருடியவர் கைது
குளியாபிட்டிய நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான சம்பத் ஆரியசேனவுக்கு சொந்தமான மடபட – பிலியந்தலை வீட்டிற்கு வந்து நீதவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரின் உத்தியோகபூர்வ காரை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதுடைய இளைஞன் எனவும், அப்போது அவர் வத்தளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாக தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரால் களவாடப்பட்ட நீதிபதியின் கார் வத்தளை – ஹுனுப்பிட்டிய வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கார் கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த பெண் ஒருவரின் பெயரில் பெறப்பட்ட சிம் அட்டையை வைத்து சந்தேகநபர் நீதவானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவானின் கார் கொள்ளையடிக்கப்பட்ட நாளில், அந்த தொலைபேசி எண்ணில் இருந்து பல்வேறு நபர்களுக்கு சந்தேகநபர் பல அழைப்புகளை மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்குவதாகவும், வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வதாகவும் பிரபல இணையத்தளத்தில் விளம்பரம் செய்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
காரை கொள்ளையடித்த பின்னர், சந்தேக நபர் நீதவானை தொலைபேசியில் அழைத்து காரில் உள்ள ஆவணங்களை ஒப்படைக்க ஐந்து இலட்சம் ரூபாவை கோரியுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.