சிவனொளிபாத மலையில் பிறந்த பெண்குழந்தை

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெண்ணொருவர் அங்கு குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

யாத்திரை சென்ற ஒரு பிள்ளையின் தாயான இந்த பெண், நேற்று சனிக்கிழமை தமது இரண்டாவது குழந்தையை பிரசவித்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி – மாரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவர் மலை ஏறிக்கொண்டிருந்த வேளையில் இரவு 7.30 அளவில் பெண் குழந்தையொன்றை பிரசவித்ததுடன் சக யாத்திரிகர்கள் அந்த பெண்ணுக்கு உதவி புரிந்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் அப்பகுதியில் உள்ள காவலரண் ஊடாக நல்லதண்ணி பொலிஸ்நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய, மலையுச்சிக்கு பொருட்கள் கொண்டுசெல்லும் பணியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் தாயும், சேயும் பாதுகாப்பான முறையில் நல்லதண்ணி பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர்.

பின்னர், நோயளர் காவு வண்டி ஊடாக அவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது, தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.