
நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய சிற்றூழியருக்கு விளக்கமறியல்
-திருகோணமலை நிருபர்-
திருகோணலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியரை எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைவலி மற்றும் தலைசுற்று காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த பாலையூற்று பகுதியைச் சேர்ந்த புஷ்பராசா நிர்மலா என்ற பெண் தனது தங்க ஆபரணத்தை சிற்றூழியர் திருடியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நோயாளர்களை அனுமதிக்கும் அறையில் கடமையாற்றி வந்த சிற்றூழியர் பாதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க ஆபரணத்தை கழற்றி பையில் வைக்குமாறு கூறியதை அடுத்து குறித்த பெண் ஆபரணத்தை கழற்றி தனது பையில் வைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பையில் இருந்த தங்க ஆபரணத்தை சிற்றூழியர் திருடியதாகவும் தான் அது குறித்து சிற்றூழியரிடம் கேட்டபோது தான் எடுக்கவில்லை என அவர் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட துறைமுக பொலிஸார் திருடப்பட்ட தங்க ஆபரணத்தை கைப்பற்றியதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய சிற்றூழியரான பொலன்னறுவை -பழுதெனிய பகுதியில் வசித்து வரும், நான்கு பிள்ளைகளின் தாயாரான ரத்நாயக்க முதியன்சலாகே மதுமாலி ரத்னாய்க்க (31 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த வைத்தியசாலை சிற்றூழியரை நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.