ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆவது ஆண்டு ஜனனதின நிகழ்வு

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்,  நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ். மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆவது ஆண்டு ஜனதின நிறைவு மாநாடும், ஜனனதின குருபூஜைதின நிகழ்வு இன்று நல்லூர் நாவலர் மணிமண்டபவத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் ய.அநிருத்தனன் தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்திலே ஆன்மிக அரங்கில் இருந்து இன்று புதன்கிழமை 7.30 மணிக்கு குருபூஜை நிகழ்வுகளோடு ஆரம்பமாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து நாவலர் பெருமானின் வரலாற்றைச் சித்திரிக்கின்ற ஓவியங்களும் நாவலர் பெருமானால் நம் சமூகத்திற்குத் தரப்பட்ட படைப்புகளும் உள்ளடங்கிய உருவப்படத்துடன், பெருமானின் திருவுருவப் படம் தாங்கிய திருவூர்வல நிகழ்வு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலிருந்து நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபம் நோக்கிப் பவனிவரப்பட்டது.

நாவலர் கலாசார மண்டபத்திலே, பெயர்ப் பலகைத் திரை நீக்கத்தினைத் தொடர்ந்து அதில் அமைக்கப்பட்டிருந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் உருச்சிலைக்காக குருபூஜை மலர்மாலையினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அணிவித்தார்.

இந்நிகழ்வில் ”நாவலர் சைவக்காவலர்’ எனும் தலைப்பிலான செஞ்சொற்செல்வர், கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் சிறப்புரை, மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், ஆறுமுகநாவலரின் 200 ஆவது ஆண்டு ஜனத்தின் சைவசமய விழுமியத்தில் உண்மைகள், அதன் நடைமுறைகளும் என்னும் ஆய்வுரையும் இடம்பெற்றன.

இவ் நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் வணக்கதிற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் மற்றும் சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் வணக்கத்திற்குரிய து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், ரிஷி தொண்டு நாவலர் சுவாமிகள், யாழ். மாநகர ஆணையாளர் செ.ஜெயசீலன், யாழ்.பல்கலைக்கழக வேந்தர். பத்மநாதன், முன்னாள் ஒய்வு பெற்ற யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்கள், சிவலிங்கராஜா, செ.சண்முகதாஸ், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கேமலோஜினி சசிகரன், யாழ் மாநகர உறுப்பினர்கள் மற்றும் சமயப் பெரியார்கள்,  கல்விமான்கள், அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ் குருபூஜை மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் இன்றில் இருந்து 15, 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இதில் ஆறுமுகநாலரினை 200ஆவது ஜனத்தினை பற்றி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களாக தொகுக்கப்பட்ட 24 ஆய்வுக்கட்டுரைகளும், 13 உப கட்டுரைகளும் இதன் போது வாசிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து சைவகாவலர் நாவலர் நூலும் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.