காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
-யாழ் நிருபர்-
வடமராட்சி கிழக்கு மாமுனை கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை கரையொதுங்கியது.
நாகர்கோயில் வடக்கை சேர்ந்த நந்தகுமாரன் திருமுருகன் (13 வயது) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த 29 ஆம் திகதி மதியம் மாமுனை கடலில் 3 சிறுவர்கள் குளித்துள்ளனர் . ஒரு சிறுவன் கரையேறிய போதும் ஏனைய இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவரும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். கரையிலிருந்த சிறுவன் துரிதமாக செயற்பட்டு ஒரு சிறுவனை மயிரிழையில் காப்பாற்றியுள்ளார்.
மற்றைய சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. காப்பாற்றப்பட்ட 16 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காணாமல் போன சிறுவனை தேடும் பணிகள் நடந்து வந்த நிலையில், நேற்று அதிகாலையில் செம்பியன்பற்று கடற்கரையோரத்தில் சிறுவனின் சடலம் கரையொதுங்கியது.