13ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைக்கும் என நினைப்பது முட்டாள்தனம்
-யாழ் நிருபர்-
சில தமிழ் தரப்புக்கும் 13ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைத்து விடும் என நினைப்பது முட்டாள்தனமான விடயம் என முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தின் முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற 13-வது திருத்தத்தின் சாதக பாதகங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 வது திருத்தம் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு விடயம்.
13 வது திருத்தத்தை ஆராய்வதற்கு முன்னர் வரலாற்றின் பிற்பகுதியை நோக்கிச் சென்றால் 1925ஆம் ஆண்டு எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா யாழ்ப்பாணம் வந்தபோது இலங்கையை மூன்று பிரிவுகளாக சமஷ்டி அடையில் பிரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.
அவர் அந்த கோரிக்கையை முன் வைக்கும் போது அவருக்கு வயது சுமார் 27 என நினைக்கிறேன் வயது பெரிய விடயம் அல்ல அதேபோன்று 1944 களில் கம்யூனிச கட்சியினர் இலங்கையை இரு அரசுகளாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் சிங்களவர்களுக்கு ஒரு அரசும் தமிழர்களுக்கு ஒரு அரசும் நிறுவப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.
ஜே. ஆர் தமிழும் சிங்களமும் அரச கரும மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை மக்கள் சபையில் முன் வைத்தார்.
அப்போது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜி.ஜி. பொன்னம்பலமும் இலங்கை தந்தை செல்வாவும் 50 க்கு 50 வேண்டும் என்று கேட்டார்கள் சமஸ்டியை கேரவில்லை.
1947 ஆம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது மொத்தமாக 95 ஆசனங்களில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களுக்கு 7 ஆசனங்களும் மலையகத் தமிழரை பிரதிநிதுவப்படுத்தியவர்களுக்கு 7 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றது.
மலையக தமிழர் சார்ந்து முதன் முதலில் ஏழு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றமையை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.
பிற்பட்ட நாட்களில் மலையக தமிழருக்கான பிரஜா உரிமை தொடர்பில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்து தந்தை செல்வா பிரிந்து தமிழரசு கட்சியை உருவாக்கினார்.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் சிங்களவருக்கு பாதி தமிழருக்கு பாதி என்ற நிலைப்பாடு இருந்த நிலையில் சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் அந்த நிலைமை சற்று மாறியே சென்றது.
இவ்வாறு பிரச்சனைகள் பல எழத் தொடங்கிய காலத்தில் ஜே ஆர் தமிழ் மக்களை அடக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை ஏற்றார்.
தற்போது 13 வேண்டும் வேண்டாம் என்ற பிரச்சனை தமிழர் தரப்பிலே எழத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ் தரப்புகள் ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று பதின்மூன்றைக் கோர வேண்டும்.
13ஐ எதிர்த்து விட்டால் தனிநாடு கிடைத்து விடுமென சிலர் முட்டாள்தனமாக சிந்திப்பது இருக்கும் சொற்ப அனுகூலங்களையும் இழந்து விடுவதாக அமைகிறது.
ஆகவே கருத்து முரண்பாடுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கின்ற சொற்ப அதிகாரமான 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று இந்தியாவைக் கோர வேண்டுமென, அவர் மேலும் தெரிவித்தார்.