தனது ஒரு பாதத்தை இழந்த நிலையில் தன் மகனின் பார்வைக்காக கையேந்தும் தந்தை

 

-மன்னார் நிருபர்-

 

இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு போர் தமிழர் வாழ்வியலில் பல விதமான மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது இந்த கொடூர யுத்தத்தினால் தமிழர்  பகுதிகளில் பலர் மரணித்தனர், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்இ இன்னும் பலர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலை காணப்படுகிறது.

ஆனாலும் யுத்தத்தின் வடுக்களினாலும் நேரடியாக யுத்ததினாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மாற்றுத்திறனாளிகளாக எம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது 14 வயதில் ஆயுதம் ஏந்தி போராடி தற்போது மாற்றுத்திறனாளியாகியுள்ள சிலுவைராச என அழைக்கப்படும் தமிழ் கீதனின் தற்போதைய நிலையே இது.

மன்னார் விடத்தல் தீவு பகுதியை சேர்ந்த தமிழ் கீதன் ‘யாழ் செல்லும் படையணியை’ சேர்ந்த வீரர் ஆவார்.

மாங்குளம் யுத்தம் ஓயாத அலைகள் நடவடிக்கை போன்ற சமர்களில் கலந்து கொண்ட குறித்த போராளி தற்போது தோட்டவெளி ஜோசேவாஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் வாழ்ந்து வருகிறார்.

1999 ஆண்டு ஆனையிறவு பகுதியில் இடம் பெற்ற யுத்தத்தின் போது தனது ஒரு காலின் பாதத்தை முழுவதுமாக இழந்த நிலையில் தமிழ் கீதன் மாற்றுத்திறனாளி ஆனார்.

ஒழுங்காக நடக்க முடியாத நிலையில், தனது 3 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை பராமரிப்பதற்காக தனக்கு கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று குடும்பத்தை பராமரித்து வருகிறார்.

ஆனால் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி வாழ்க்கைக்கான செலவு அதிகரிப்பு என அனைத்தும் இவரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியுள்ளன.

குடும்ப வறுமை காரணமாக இவரின் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் சிறிய சம்பளத்திற்காக சுத்திகரிப்பு பணியாளராக வேலை செய்து வருகின்றார்.

இவ்வாறான துன்பியல் நிலையில் தமிழ் கீதனின் மூத்த மகள் உயர்தரத்தில் கல்வி பயில்கின்றனர்.

இரண்டாவது மகன் விபத்து ஒன்றினால் பாதிக்கப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு அவரும் மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார்.

அத்துடன் அவரின் மூன்றாவது மகனும் பார்வை இல்லாத குழந்தையாக பிறந்துள்ளார்.

இவ்வாறு தானும் இரு மாற்றுத்திறனாளி பிள்ளைகளும் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத நிலையில் அன்றாடம் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளி மகனின் பார்வைக்காக பல சிகிச்சைகளை மேற்கொண்ட போதிலும் தன்னிடம் இருந்த படகு மற்றும் இதர சொத்துக்களை விற்று சிகிச்சை மேற்கொண்டும், எவையும் பலன் தராத நிலையில், மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றார்.

மகனின் கண்களை விழித்திரை மறைப்பதினால் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில், அவ் விழித்திரையை சரி செய்யும் சிகைச்சையை மேற்கொள்ள வசதியில்லாமல் தவித்து வருகின்றார்.

தனக்கு ஆடம்பர உதவிகள் எதுவும் செய்யாவிட்டாலும் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவிக்கும் ஏதேனும் உதவிகளை புலம்பெயர் உறவுகள் வழங்க முன் வந்தால் தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய மகனின் சிகிச்சையையும் கொண்டு நடத்த உதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வாழ்வாதார உதவிகள் வழங்க விரும்பாவிடினும் எனது மகன் பார்வை பெறுவதற்கு மேலதிக சிகிச்சை வழங்குவதற்கான உதவிகளையாவது யாரும் வழங்க முன்வருமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.