பெற்றோரின் பாடசாலை கனவு

சீருடை அணிந்து பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற பெற்றோரின் ஆசையை கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயம் நிறைவேற்றியுள்ளது.

கந்தலோயா தமிழ் வித்யாலயம் 2006ம் ஆண்டுக்கு முன்னர் தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையில் ஒரு பக்கத்தில் தோட்ட பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. அப்போது இரண்டு ஆசிரியர்கள் மாத்திரமே இந்தப் பாடசாலையில் கடமை புரிந்தனர்.

2006ம் ஆண்டு இந்தப் பாடசாலைக்கு முதல் பாடசாலை கட்டடம் கிடைத்ததையடுத்து முறையாக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு, அந்தப் பாடசாலையில் கடமை ஆற்றிய ஆசிரியர் கருணாகரன், அந்தப் பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்றதையடுத்து, பல முயற்சிகளை செய்து, அந்த பாடசாலை பலர் அறிய செய்தார்.

இந்த கடந்த 19ம் திகதி 20க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கந்தலோயா பாடசாலைக்கு சீருடை அணிந்து வருகை தந்தனர். அத்துடன், மேலும் பல பெற்றோரும் இதன்போது சீருடை அணியாமல் பாடசாலைக்கு வருகைதந்துள்ளனர்.

இதுவரை இந்தப் பாடசாலையில் இருந்து 35 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். அதிபராக வந்த முனியாண்டி கருணாகரன் இந்தப் பாடசாலை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்து சேவை செய்து கொண்டிருக்கின்றார் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாம் ஒரு பாடசாலைக்கு சீருடைய அணிந்து செல்ல வேண்டும் என்ற ஆசையை கந்தலயா தோட்ட பெற்றோர்கள் நிறைவேற்றிக் கொண்டனர்.

இது குறித்து பெற்றோர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சிறிய வயதில் பாடசாலைக்கு செல்ல ஆசைகள் இருந்த போதிலும் கல்வி கற்பதற்கு ஒரு பாடசாலை இல்லாத நிலையில் கல்வியை கைவிட்டு தோட்டங்களில் தொழிலுக்கு சென்றோம். ஆனால் தற்பொழுது எமது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று கல்வி கற்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறோம் என்றனர்.

எனவே, தாமும் இவ்வாறு பாடசாலைக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்று ஒரு ஆசை ஏற்பட்டதன் காரணமாக தமது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைக்கு சீருடை அணிந்து வந்ததாகவும் பெற்றோர் மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்