
தமது நலனுக்காக சில ஊடகங்கள் திட்டமிட்ட பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன – சுகாஷ்
சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் எந்த விதத்திலும் அந்த வழக்குடன் சம்பந்தப்படவில்லை என்பதை நான் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன், பல ஊடகவியலாளர்களால் ஊடகத்துறை நிமிர்ந்து நின்றது.
தமிழ் தேசியத்திற்கு வலுவூட்டும் ஜனநாயகத்தினுடைய நான்காவது தூணாக தமிழ் தேசியவாதிகளால் பார்க்கப்பட்டது ஊடகவியல். ஊடகவியலாளர்கள் அந்த நேர்மையான பணியினை முன்னெடுக்கின்ற ஊடகவியலாளர்கள் மதிக்கப்பட வேண்டும்.
இன்று தேர்தல் காலத்திலே திட்டமிட்ட வகையிலே சில ஊடகங்களிலே பொய்யான செய்திகளை தங்களுடைய நலன்களுக்காகவும் தங்களுடைய நிகழ்ச்சிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் வெளியிட்டு வருவது வேதனையான விடயம்
இது கண்டிக்கப்பட வேண்டியது, நிறுத்தப்பட வேண்டியது, தமிழ் தேசியத்தை சிதைக்க கூடியது, தமிழ் தேசியத்தை சிதைக்கின்ற செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
சமூகப் பரப்பில் சில வழக்குகளை மோசமான வழக்குகளாக பார்த்தார்கள். ஆயினும் அதில் சட்டத்தரணிகள் ஆஜராவது வழக்கமான விடயமாகும்.
அந்த வகையில் சட்டத்தரணியின் பெயரை குறிப்பிடாது சட்டத்தரணி ஆஜரானார் என்ற செய்திகளே ஊடகங்களில் வழமையாக பிரசுரமாகும் நிலை காணப்படுகையில் நான் ஆஜராகாத வழக்கிற்கு எனது பெயரையும் கட்சியின் பெயரையும் இணைத்து ஆஜரானேன் என்று பொய்யான செய்தியை வெளியிட்டமையானது வேதனையளிக்கின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர மிகுதி அனைத்து கட்சிகளும் ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்பதற்கு உடன்பட்டு உள்ள நிலையில் தமிழ் மக்களினுடைய சமஸ்டியை வலியுறுத்துகின்ற ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே செயல்படுகின்றது.
வெளிநாடுகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துப்போகாது உள்ள கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தொட்டுப் பார்க்க முடியாத சில தரப்புகள் நம்மளுடைய பொய்யான செய்திகள் வெளியிட்டு எமக்கு அபகீர்த்தி ஏற்படுத்து முகமாக எமக்கு எதிராக செய்தி வெளியிட்டுள்ளார்கள், என அவர் மேலும் தெரிவித்தார்.
