முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைப்பு

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக முச்சக்கர வண்டி கட்டணம் ஒரு கிலோமீற்றருக்கு 20 ரூபா குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 80 ரூபாவும் அறவிடுமாறு கோரப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

மீற்றர் பெட்டிகளை கொண்ட முச்சக்கர வண்டிகளை மாத்திரமே இவ்விலைகுறைப்பை அமுல்படுத்த கோர முடியும் என தெரிவித்த அவர், தற்போது பல்வேறு கட்டணங்களின் கீழ் முச்சக்கரவண்டிகள் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகளுக்கு வாராந்தம் ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படுவதனால்,  மேலதிகமாக  அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளைப் பயன்படுத்தி செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைப்புக்கு ஏற்ப எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டி கட்டணத்தை மேலும் குறைக்க முடியும் என லலித் தர்மசேகர மேலும் தெரிவித்துள்ளார்.