‘ யுக்கிய’ நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்தக் கோரும் ஐ.நா. நிபுணர்கள்

-கொழும்பு-

 

போதைப்பொருள் கடத்தலுக்கும் திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கும் எதிராக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அரசாங்கம் எடுத்துவரும் நாடளாவிய நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்தி மீளாய்வு செய்யுமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை முற்றிலும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறையின் அடிப்படையில் அமைந்திருப்பதே அந்த அலவலகத்தின் கவலையாக இருக்கிறது. அந்த நடவடிக்கை சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்பதே அதன் வலியுறுத்தலாகும்.

போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்களுக்கும் மனித உரிமைகள் இருக்கின்றன. சமூகத்தில் அவமதிப்புக்கும் பாரபட்சத்துக்கும் ஆளாக்கப்படாமல் கண்ணியத்துடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று உடையவர்கள் என்று கூறும் ஐ.நா. நிபுணர்கள் யுக்திய நடவடிக்கையின்போது சமூகத்தில் பின்தங்கிய பின்னணியைக் கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் அடாத்தான முறையில் கைதாவது குறித்தும் நூற்றுக் கணக்கானவர்கள் இராணுவத்தினால் நடத்தப்படும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு பலவந்தமாக அனுப்பப்படுவது குறித்தும் சித்திரதைக்கு ஆளாவது குறித்தும் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

போதைப்பொருள் பாவனை சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறை மேற்கொள்ளப்படுவதாக கூறியிருக்கும் நிபுணர்கள் புனர்வாழ்வு என்பது போதைப்பொருள் பாவனையின் பாதிப்புகளில் இருந்து சந்தேக நபர்களை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும் என்றும் கட்டாய புனர்வாழ்வு நிலையங்கள் உடினடியாக மூடப்பட்டு சுயவிருப்பிலான புனர்வாழ்வு செயன்முறைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

யுக்திய நடவடிக்கையின்போது இடம்பெறுவதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை அரசாங்கம் பாரபட்சமற்ற முறையில் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருக்கிறார்கள்.