ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இருந்த சிக்கல் நீங்கியது!

ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளைத் தன்னிச்சையாகத் தொடர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.

ஈரானுக்கு எதிரான போரைத் தொடர்வதற்கு நாடாளுமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 48 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

இந்த முடிவின் மூலம், ஈரானுக்கு எதிரான அடுத்தகட்டத் தாக்குதல்கள் அல்லது இராணுவ நகர்வுகளை மேற்கொள்வதற்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நாடாளுமன்றம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

செனட் சபையின் இந்த நிராகரிப்பு, தற்போதைய பதற்றமான சூழலில் இராணுவ ரீதியான முடிவுகளை எடுப்பதில் வெள்ளை மாளிகைக்கு முழுமையான அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது.

இதன் விளைவாக, ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவத் திட்டங்கள் எந்தவித சட்டச் சிக்கல்களுமின்றித் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.