இழுபறியில் இருந்த நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி சட்டத்தரணி றியாஸ் ஆதம் வசமானது!

இரு தடவைகள் இழுபறியில் நிலவிய நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று திங்கட்கிழமை நடைபெற்றதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி றியாஸ் ஆதம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல். அஸ்மி தலைமையில் நடைபெற்ற இத்தெரிவு நடவடிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 06 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுலைமான் சாபி கலந்துகொண்ட நிலையில் கோரம் உருவாகி தவிசாளர் பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுலைமான் சாபி வாக்கெடுப்பில் தவிர்ந்து கொண்டார்

முன்னதாக நடைபெற்ற இரண்டு அமர்வுகளிலும் பல்வேறு காரணங்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலான சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமையால் தவிசாளர் தெரிவு இடம்பெறாமல் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் பிரதேச சபையின் நிர்வாக நடவடிக்கைகள் தாமதமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அமர்வில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான றியாஸ் ஆதம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.