புதிய தலைவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் – டொனால்ட் டிரம்ப்

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக நியமிக்கப்படும் ஈரானின் அடுத்த அதி உயர் தலைவர், முதலில் தமது ஒப்புதலைப் பெறத் தவறினால் அவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏபிசி (ABC) செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் எங்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறிய டிரம்ப், அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வருபவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் அதிக காலம் நீடிக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்தார்.

என்னை போன்ற ஒரு ஜனாதிபதி இல்லாத சூழலில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நாம் மீண்டும் அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம், என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.