மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொன்ற கணவர்
பிராயாணியால் வந்த சண்டையில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் கருணாகரன்(75) , பத்மாவதி (65) தம்பதியினர். கருணாகரன் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இத்தம்பதியினருக்கு குமார்(46), மகேஸ்வரி(50), ஷகிலா(44), கார்த்திக்(40) என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கருணாகரன் பத்மாவதி தம்பதியினர் தனிமையின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகள் மருத்துவ சிகிச்சைக்கு பின் தற்போது அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு, கருணாகரன் வீட்டிற்கு பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது மனைவி பத்மாவதி தனக்கும் பிரியாணி வேண்டும் என கேட்க இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின் கோபமடைந்த கருணாகரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது மனைவி பத்மாவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
பத்மாவதி தனது உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறடித்துக் கொண்டே தனது கணவரான கருணாகரனை கட்டிப்பிடித்துள்ளார். இதனால், கருணாகரன் மீதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இருவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் நுழைந்து தீயை அணைத்து பின் ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பத்மாவதி மரணம் வாக்குமூலம் அளித்துள்ளார். கணவர் மட்டும் தனியாக பிரியாணி வாங்கி சாப்பிட்டதால் தனக்கும் பிரியாணி வாங்கி தர கேட்டபோது பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் தனது கணவர் தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டதாகவும் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரியாணி சண்டையில் தனது மனைவியை கொலை செய்யும் நோக்கோடு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கருணாகரன், 50 சதவீகித தீக்காயங்களுடன் தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மனைவி பத்மாவதி சிகிச்சை பலனின்றி கே எம் சி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அயனாவரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.