
வலுசக்தி அமைச்சர் தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள வலுசக்தி அமைச்சர், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும், என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, அரசாங்கமே முறைகேடுகளை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.
குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர்கள் கூறினாலும், அதனால் ஏற்படும் நஷ்டத்தை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்தார்.
ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய எவருக்கும் ஊழலில் தொடர்பில்லை என முன்னர் கூறப்பட்ட போதிலும், தற்போது வலுசக்தி அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அந்த கூற்றுகளுக்கு முரணாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் புதிய தலைமைத்துவங்கள் உருவாவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியோரின் தலைமையிலான அரசியல் சக்திகள் நாட்டின் அரசியல் களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மூத்த அரசியல் தலைவர்களை ஓரம் கட்டுவது தவறு எனத் தெரிவித்த அவர், இளம் தலைவர்கள் உருவாவதற்கு அனுபவம் வாய்ந்த தலைவர்களின் வழிகாட்டல் அவசியம் எனத் தெரிவித்தார்.
கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, நவீனமயமாக்கலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும், என நாமல் ராஜபக்ஷ தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டினார்.
