குடும்பத்தினரை கோடரியால் வெட்டிக்கொன்ற சிறுவன்

திரிபுரா மாநிலம் தலாயி மாவட்டத்தில் உள்ள கமலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹராதன் தேப்நாத். ஓட்டுநரான இவருக்கு 17 வயதில் சுப்ரியா தேப்நாத் என்ற மகன் உள்ளார். இவர் கொரோனா லாக்டவுன் காலத்தில் போதை பொருள் பழக்கத்திற்கு தீவிரமாக அடிமையாகியுள்ளார். எனவே, படிப்பை நிறுத்தி விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார் சுப்ரியா. மேலும், வீட்டில் குற்றச் சம்பவங்கள் அது தொடர்பான சீரியல்களை விரும்பி பார்த்து வந்துள்ளார். போதைக்கு அடிமையானதால் சுப்ரியா குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மத்திய வேளையில் ஹர்தன் தேப்நாத் பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். அப்போது இரவு நேரத்தில் ஹர்தனின் 17 வயது மகன் சுப்ரியா தேப்நாத் அவரது தாய் சுமிதா, தங்கை சுபர்னா, தாத்தா பாதல், மற்றொரு உறவினர் ரேகா ஆகியோரை கோடாரியை கொண்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். அத்துடன் அவர்கள் உடலை வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இரவு 11 மணி அளவில் தந்தை ஹர்தன் வீடு திரும்பிய போது, வீட்டில் ரத்த கறைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் சுற்றுப்புறங்களில் தேடிப் பார்த்து பின்புறத்தில் தனது குடும்பத்தினர் உடலை மீட்டு எடுத்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பமே கொலை செய்யப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹர்தன், மகனை காணவில்லை என்பதால் சந்தேகம் அடைந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறை இன்று அதிகாலை சுப்ரியாவை கைது செய்தனர். கைதான சுப்ரியா தனது குற்றத்தை காவல்துறையிடம் கொலை ஒப்புக்கொண்டுள்ளார். வெளியே சத்தம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக கொலை செயலில் ஈடுபடும் போது டிவியில் சத்தமான இசையை ஒலிக்க வைத்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். எனினும் கொலைக்கான நோக்கம் என்ன என்பதை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.