உயிரிழந்த இளம் தொழிலாளியின் குடும்பத்திற்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடு

-பதுளை நிருபர்-

நமுனுகுல கனவரல்ல ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

அதற்குரிய காசோலை தோட்ட நிர்வாகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது, 26 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை தோட்ட முகாமையாளரின் ஊடாக உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு நேற்று வியாழக்கிழமை 1.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை தோட்ட நிர்வாகத்தினால், இழப்பீட்டு ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளதாக கனவரல்ல தோட்ட முகாமையாளர் சாமிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கனவரல்ல தோட்டத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளியான தமிழரசன் கணேசமூர்த்தி  (25 வயது) கடந்த மாதம் 9 ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அவரது இறப்புக்கு நீதிக்கோரி, சடலத்தை தொழிற்சாலையில் வைத்து தோட்டமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து, தொழில் அமைச்சர் மற்றும் தோட்ட நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் 40 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க பெருந்தோட்ட நிர்வாகம் உடன்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.