
திரையரங்குகளை திறக்க தீர்மானம்
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த 49 திரையரங்குகளில் 10 திரையரங்குகளை அடுத்த மாதம் மீண்டும் திறக்க தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் வேகமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டளவில் இலங்கையில் திறக்கப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை 191 ஆக இருந்தது.
கொரோனா தொற்றுநோய் மற்றும் திரைப்படத் திரையிடல் கட்டுப்பாடு காரணமாக வருவாய் இழப்பு காரணமாக, 49 திரையரங்குகள் மூடப்பட்டன.
இந்நிலையைக் கருத்தில் கொண்டு திரையரங்கு உரிமையாளர்களுக்கு திரைப்பட மேம்பாட்டு நிதியின் மூலம் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திரையுலகின் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திரைப்படக் கழக பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திரைப்பட பார்வையாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் வாடகை வண்டி சாரதிகள் வருமானத்தை இழந்துள்ளனர்.
