வைத்தியர்கள் இன்றி காலாவதியாகும் மருந்துகள்

பதில் வைத்தியரை நியமிக்காது மேல்படிப்பிற்காக வைத்தியரை விடுவித்தமையால் மக்கள் பாதிப்பென்பதுடன் மருந்துகளும் காலாவதியாகிறது, என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் குற்றம் சாடியுள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள உருத்திரபுரம் மற்றும் கந்தபுரம் ஆகிய ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள் மேற்படிப்புக்காக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பதில் கடமைக்கு நியமிக்கப்படாது, இவ்வாறு வைத்தியர்களை விடுவித்தமையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளும் காலாவதியாகிறது.

இந்த நிலையில், மக்களிற்கான சேவையை வழங்க வேண்டிய பிரதேச சபை, அதிலிருந்து விலகியதான நிலை தொடர்பில் கவலை அடைகிறது.

இதற்கான நடவடிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் மேற்கொள்ள வேண்டும், என அவர் தெரிவித்தார்.