கோதுமை மா மற்றும் பாணின் விலை குறைக்கப்படுமா?

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால் மாத்திரமே பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலையை குறைக்க முடியாதுள்ளதாக நாட்டிலுள்ள பிரதான கோதுமை மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சந்தையில் தற்போது நெருக்கடியான நிலையில் காணப்படும் கோதுமை மா தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தலைமையில் வர்த்தக அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கோதுமை மா நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

எனினும், கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை என கலந்துரையாடலின் பின்னர் வெளியில் வந்த, கோதுமை மா நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.