
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு திடீர் கள விஜயம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு 08.15-க்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ‘மீனகயா’ கடுகதி புகையிரதத்தில், வழக்கமாக இருக்க வேண்டிய 10 பெட்டிகளுக்குப் பதிலாக 6 பெட்டிகள் மாத்திரமே இணைக்கப்பட்டிருந்ததுடன், இதில் படுக்கை வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட (AC) வகுப்புப் பெட்டிகள் நீக்கப்பட்டு, சாதாரண படுக்கை வசதிப் பெட்டிகளும் குறைக்கப்பட்டுள்ளதுடன், சிற்றுண்டிச்சாலையுடன் சேர்த்து மொத்தமாக 6 பெட்டிகளாக இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மட்டக்களப்பு மாவட்ட பயணிகள் மட்டுமன்றி, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பயணிகளும், பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். போதிய எண்ணிக்கையிலான மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் இல்லாததால், நடுத்தர வர்க்கப் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி முதலாம், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் பயணிக்க முடியாத நிலையில் உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்திடம் முன்வைக்கப்பட்டது.
இதை அடுத்து, நேற்று இரவு 8.15 க்குப் புறப்படவிருந்த புகையிரதத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ. சிறிநாத், ஞா.சிறிநேசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
புகையிரத நிலைய செயற்பாடுகளையும், தற்போதைய நிலைமைகள் தொடர்பான விடயங்களையும் புகையிரத நிலைய அதிபரிடம் கேட்டறிந்து கொண்டதுடன், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவையில், பெட்டிகளின் எண்ணிக்கையை வழமை போன்று அதிகரித்து, அனைத்து வகுப்புச் சேவைகளையும் முன்னெடுப்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைத் துறைசார் அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கூடாக முன்னெடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் இதன்போது தெரிவித்தார்.
