
கரடியனாறில் இருந்து மட்டக்களப்பு நகர் வரை துரத்தி துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்!
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து, சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்ற கனரக வாகனத்தை, பொலிசார் துரத்தி சென்று துப்பாக்கி சூடு நடாத்தி மடக்கி பிடித்துள்ளனர்.
இச்சம்பவம், நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு வாகனத்தை மடக்கி பிடித்து, சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவரை, 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்துள்ளதாக, ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து, செங்கலடி பகுதியை நோக்கி சம்பவ தினமான இரவு 10.30 மணிக்கு மண் ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனம் ஒன்றை, கரடியனாறு கறுத்தப்பாலம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நிறுத்தும்படி தெரிவித்தனர்
இதன் போது, பொலிஸாரின் கட்டளையை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கி பயணித்ததையடுத்து, அவர்களை பின் தொடர்ந்து துரத்தி சென்ற பொலிஸார், ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, ஏறாவூர் பொலிஸார் வீதித்தடையை ஏற்படுத்தி வாகனத்தை நிறுத்த முயன்றனர்.
எனினும், வாகனத்தின் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் மட்டக்களப்பு நகர் பகுதியை நோக்கி தப்பிச்சென்ற வேளை, வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த வாகனத்தை நோக்கி கை துப்பாக்கியால் இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.
இதனையும் மீறி குறித்த வாகனம் மட்டக்களப்பு நகரை நோக்கி தப்பி ஓடிய நிலையில், மட்டு தலைமையக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, நகரின் மட்டக்களப்பு நகருக்குள் வீதித்தடை அமைக்கப்பட்டு குறித்த கனரக வாகனத்தை நிறுத்தி மடக்கி பிடித்து சாரதியையும் உதவியாளரையும் கைது செய்தனர்
இதன் போது, கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து, 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளையும், 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிக்கிராம் ஹேரோயின் போதை பொருளை மீட்டு, ஏறாவூர் பொலிஸாரிடம், மட்டு தலைமையக பொலிஸார் ஒப்படைத்தனர்
குறித்த சாரதி, கரடியனாறு பகுதியில் 8 மாடுகளை திருடிய மற்றும் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்பட்டவர் எனவும், அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
