
O/L பரீட்சை எழுதிய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
திருகோணமலை-கந்தளாய், பேராற்றுவெளி பகுதியில் உள்ள ஆற்றில், நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல், குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பேராற்று வெளியைச் சேர்ந்த ரிஸ்லான் (வயது 16) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர், இம்முறை க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியிருந்தார்.
நேற்று முற்பகல் சுமார் 11.30 மணியளவில், நான்கு இளைஞர்கள் இணைந்து குறித்த ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
வழக்கமாக அவர்கள் நீர் அதிகமாக இருக்கும் போது, ஒரு இடத்தில் குளித்து நீரோட்டத்துடன் மிதந்து அடுத்த பகுதியில் கரையேறும் பழக்கம் கொண்டிருந்தனர்.
இன்றும் அதேபோல் குளித்தபோது, ரிஸ்லான் அடுத்த இடத்திற்குச் சென்றுவிட்டார் என எண்ணிய நண்பர்கள், அவரது உடைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை முடித்து வீடு திரும்பியபோது, அவர் வீடு திரும்பாததை அறிந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது, அவர் குளித்த இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் நீரில் சிக்கிய நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கந்தளாய் பொலிஸார் சடலத்தை மீட்டு கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
