வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் மாற்று பாதையை தேர்ந்தெடுத்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

மத்திய கிழக்கு வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள், தனது ஐரோப்பிய இலக்குகளுக்கான பயணங்களுக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஊடாகச் செல்லும் மாற்று வான்பாதையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்தப் பிராந்தியத்தின் வான்பரப்புகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.

இதற்குப் பதிலடியாக ஈரானும் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதால், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகமும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவிக்கையில்,

“இந்த வான்பாதை மாற்றத்தின் காரணமாக, உதாரணமாக லண்டனுக்கான விமானப் பயண நேரம் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களாலும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, விமானம் சுமந்து செல்லும் சுமையின் அளவைக் (Payload) குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.”

வான்பரப்பு மூடப்பட்டுள்ளதன் காரணமாக மத்திய கிழக்கு நகரங்களுக்கான திட்டமிடப்பட்ட விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான விசேட விமானங்கள் மாத்திரமே இயக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதன்படி, நேற்று ஏழு விமானங்கள் மாத்திரமே பயணங்களுக்காகத் திட்டமிடப்பட்டிருந்தன.

இந்த மாற்றத்தினால் விமான நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்துக் கேட்டபோது, அது பாரிய அளவில் இருக்கக்கூடும் என்றும், எனினும் அதன் துல்லியமான பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.