விலை குறைக்கப்பட்டும் மக்களுக்கு ஏமாற்றம்

-கல்முனை நிருபர்-

மட்டு – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தன்னிச்சையாக பொருட்களின் விலைகளை கூட்டி விற்பனை செய்யும் வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுக்கின்றனர் .

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் சாதாரண மக்கள் தங்களது வயிற்றுப் பசியை கூட தீர்க்கமுடியாது வறுமையில் சிக்கித்தவிக்கின்றனர்.

இன்றைய பொருளாதார நெருக்கடியை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் வர்த்தகர்கள், வியாபாரிகள் கட்டுப்பாட்டு விலைகளை மீறி அவரவர்கேற்ப பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது சீனி, பருப்பு, அரிசி போன்றவற்றின விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர்களினால் கூறப்பட்ட போதிலும் விலை குறைக்கப்பட்ட பொருட்களை கடைகளில் பெறுவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பல கடைகளில் பழைய விலைகளிலே சீனி, பருப்பு போன்றவை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பிரதேச நுகர்வோர் உத்தியோகத்தர்கள் பெரும் வர்த்தக நிலையங்கள் மற்றும் உள்ளுர் வியாபார நிலையங்களை பரிசோதனை செய்து விலை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.