விமானத்தில் இலங்கை சிறுமி துஷ்பிரயோகம்

விமானத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த 9 வயதுடைய சக பயணியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸாரால் இந்திய நபர் ஒருவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பயணியை விமான ஊழியர்கள் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர். சந்தேக நபரும் பாதிக்கப்பட்டவரும் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் இருந்து விமானத்தில் வந்துள்ளனர்.

ரியாத்தில் இருந்து வந்த 49 வயதுடைய தச்சுத் தொழில் செய்யும் சந்தேக நபர் கட்டுநாயக்க ஊடாக இந்தியாவிற்கு செல்ல இருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளையில் உள்ள கெட்டஹெட்ட பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தாயார் மற்றும் சகோதரி சவுதி அரேபியாவில் பணிபுரியும் தனது தந்தையைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சிறுமியும் சந்தேக நபரும் மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்கம் பத் மற்றும் எஸ்ஐ சந்தன ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.