உள்ளாடைக்குள் மறைத்து பந்து மலைப்பாம்புகளை கடத்தியவர் விமான நிலையத்தில் கைது!
பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் வனவிலங்குகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
அவரது உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று பந்து மலைப்பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இலங்கையைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், தாய் ஏயார்வே விமானம் TG308 மூலம் நள்ளிரவு 12.06 மணிக்கு பாங்கொக் விமான நிலையத்தை அடைந்துள்ளார்.
சந்தேகநபர் குறித்து பாங்கொக் விமானநிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் அவர் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.
குறித்த நபர் விமானநிலையத்தில் தனது பொருட்களை சோதனைக்குட்படுத்திய பின், அவரை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பந்து மலைப்பாம்புகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்
குறித்த இலங்கையர் 2024 ஆம் ஆண்டு ஓநாய்கள் (wolves), பாலைவனக் கீரிகள் (meerkats), கருப்பு காகடூக்கள் (black cockatoos), சர்க்கரை அணில்கள் (sugar gliders), முள்ளம்பன்றிகள் (porcupines), பந்து மலைப்பாம்புகள் (ball pythons), உடும்புகள் (iguanas), தவளைகள் (frogs), சலமந்தர்கள் (salamanders) மற்றும் ஆமைகள் (turtles) உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு இனங்களை கடத்தியதாக கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாங்கொக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.