
நோன்பு காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை
-அம்பாறை நிருபர்-
சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில், ஹோட்டல்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பரிசோதனைகளின் போது, உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை, காலாவதி திகதி, சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்து, சேமித்து, விற்பனை செய்வதற்கான சுகாதார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுகளைப் பெறுவதை உறுதிசெய்வதே இச்சோதனை நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும், என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் குறிப்பிட்டார்.
