சுவிட்சர்லாந்தில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

மேற்கு சுவிட்சர்லாந்தின் பெர்ன் (Bern) நகருக்கு அருகில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பெர்ன் நகரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க் (Fribourg) மாகாணத்தின் கெர்சர்ஸ் (Kerzers) மையப்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டுடிங்கன் (Düdingen) நகராட்சியிலிருந்து புறப்பட்ட இந்தப் பேருந்து, கெர்சர்ஸ் பகுதியை நெருங்கியபோது திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் , காயமடைந்த நிலையில் மூவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இவர்களில் மீட்பு நடவடிக்கையின் போது, மீட்புப் பணியாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர், இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணைகள் நடக்கின்றன.

பேருந்திலிருந்த நபர் ஒருவர் பெட்ரோலைத் தன் மீது ஊற்றிக் கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், இதனை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட காணொளிகளில், பேருந்து முழுவதுமாக தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருப்பதையும், அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சியளிப்பதையும் காண முடிகிறது என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.