
சம்மாந்துறையில் புழுக்கள் மொய்த்த பொரித்த கோழியை வழங்கிய கடை உரிமையாளருக்கு அபராதம்
சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு எதிராக 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்தின் பின்னர், இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டு ரூபாய் 15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2025 பெப்ரவரி 02 ஆம் திகதி, சம்மாந்துறை கல்லரிச்சல் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட சங்க ஒன்றுகூடலில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பரிமாறப்பட்ட பொரித்த கோழியில் புழுக்கள் இருந்தமை சங்க உறுப்பினர்களால் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடை உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவுக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு கடையை மூடிவிட்டு தலைமறைவான வெளி ஊர் கடை உரிமையாளர், சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்கு மூன்று முறை ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் நீதிமன்ற பிடிவிறாந்து (Warrant) பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் தன்னை நிரபராதி என வாதாட முயன்ற போதிலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வழங்கிய வலுவான சாட்சியங்கள் மற்றும் சட்ட வாதங்களின் அடிப்படையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளியின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ரூபாய் 15,000 அபராதம் விதித்து வழக்கு நிறைவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மூலம் பொதுமக்களின் சுகாதாரத்துடன் விளையாடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதையும், சுகாதாரமான உணவு வழங்குதல் அனைவரின் பொறுப்பாகும் என்பதையும் பொதுச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
