மன்னாரில் கைப்பற்றப்பட்ட பல டொன் பழுதடைந்த சோள விதைகள்

-மன்னார் நிருபர்-

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் உரிய அனுமதியின்றி வீதி மற்றும் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் பழுதடைந்த மற்றும் பூஞ்சைகள் நிறைந்த பல ஆயிரம் டொன் சோள விதைகள் களஞ்சியபடுத்தப்பட்டிருந்த நிலையில் மன்னார் சுகாதார துறையினர் குறித்த களஞ்சியசாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் நடுக்குடா பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக அதிகளவான சோள விதைகள் உலர விடப்பட்டுள்ளதாக, பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சோள விதைகள் உலரவிடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரம், குறித்த களஞ்சியசாலைக்கோ அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ எந்த ஒரு சட்ட அனுமதியோ அல்லது சுகாதார மருத்துவ சான்றிதலோ பெறப்படவில்லை என்றும் முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரம். இவ்வளவு தொகை பழுதடைந்த சோள விதைகள் எவ்வாறு எந்த ஒரு அனுமதியும் இன்றி மன்னார் மாவட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும், இந்த விதைகளை எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் மேலதிக விபரங்களை, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆய்வு செய்து வருகின்றது.

குறித்த சோள விதைகள் மிகவும் தரம் குறைந்த பழுதடைந்த அதே நேரம், பூஞ்சணம் பிடித்த நிலையில் உரிய சுகாதார வழிகாட்டலை பின்பற்றாது உலர விடப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் முதற்கட்டமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதே நேரம், குறித்த சோள விதைகளை பயன்படுத்தி சட்டவிரோத தரமற்ற சத்துணவு பொருள் ஒன்றை தயாரிப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் இடம் பெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த விதைகளை விலங்குனவாக பயன்படுத்தும் வகையில் கூட எந்த ஒரு அனுமதியும் பெறப்படாத நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று, அணைத்து சோள விதைகளை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.