பாடசாலை போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, இதற்கு முன்னர் பலமுறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும், நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும், இம்முறை டீசல் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் கூறினார்.

அதன்படி, குறித்த கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக லலித் சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.